Tag Archives: காற்று

இதயத்தின் மரண வாக்கு – பூத்பங்களாவை சற்று கவனி

மூச்சுவிட நினைவிபடுத்திக் கொண்டேயிருக்கும் தலைமைச் செயலாளரே,

கொரோனா காலமாக இருப்பதால், எங்களுக்கு உரிய சிக்கல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கைகளும், மூக்குகளும் எவ்வளவு கவனமாக இருந்தாலும், எங்கள் ஜோதியில் “கோவிட்-19” கலந்தால் கொண்டாட்டம் தான். நாங்கள் எவ்வளவு பரிதாபகரமாகப் பராமரிக்கப் படுகிறோம் என்பதை வாருங்கள் சொல்கிறேன்.

எனக்கு, நீங்கள் ஒரு நிமிடம் படுத்திருந்தால் 9 லிட்டரும், உட்கார்ந்து இருந்தால் 18 லிட்டரும், நடந்தால் 27 லிட்டர், ஓடினால் 56 லிட்டரும் காற்று தேவையாக இருக்கிறது. நீங்கள் என்னிடம் என்ன சொன்னாலும் நான் அதை செய்யப் போகிறேன். என்னை முறைப்படி இயக்காமல், என்னை பயன்படுத்தாமல் இருந்துவிட்டு பின்பு ஒவ்வாமை, ஆஸ்துமா போன்றவற்றால் பாதிக்கப்படும் போது அளவுக்கு அதிகமாக உழைக்கச் சொன்னால் எப்படி என்னால் முடியும்?

நான் செயற்பட, போதுமான அளவு சுருங்கி விரிவது அவசியம் தானே!

நான் சுருங்கி விரியும் கொண்டாட்டத்தையும் சொல்லிவிடுகிறேன். சற்று கேள்ளுங்கள், மார்பு அறையையும், வயிற்று அறையையும் பிரிக்கும் பகுதியில் “உதரவிதானம்” என்ற சவ்வு இருக்கிறது. இந்த சவ்வு கீழ் நோக்கி விரியும் போது, நான் விரிகிறேன். வெளியிலிருந்து ஆக்சிஜன் கலந்த இரத்தம் உள்ளே வரும். அதேபோல, இந்த சவ்வு சுருங்கும்போது நான் மேலே அழுத்தப்பட்டு, என்னிடம் சேகரமாகியிருக்கும் “கார்பன்-டை-ஆக்சைடு” சேர்ந்த இரத்தத்தை வெளி சுவாசம் மூலம் வெளியே அனுப்புகிறேன்.

என்னை காற்று அடையும் வழிமுறைகளை சற்று யோசித்துப் பாருங்கள்?…. மூக்கின் வழியாக, அதாவது கோழைப்படலம் வழியாகவும், மூக்கிலுள்ள முடிகள் வழியாகவும் சுத்தப்படுத்தப்பட்டு, தொண்டை பகுதியில் உள்ள இன்னொரு கோழைப்படலத்தால் சுத்தப்படுத்தப்பட்டு, “அக்மார்க்” ஆக்சிஜன் சுவாசக்குழல் வழியாக என்னை அடைகிறது.

மரத்தை கவிழ்த்துப் போட்டது போல், இரு பிரிவுகளாக இருப்பவை, எனது உட்சுவாசக்குழல். இந்த உட்சுவாசக்குழல்கள் மேன்மேலும் கிளைகுழல்களாகப் பிரிந்து, கடைசி அங்கமான நுண்காற்றறைகள் ( ஆல்வியோலை ) என்ற பகுதியை அடைகிறது. இப்பகுதி தான் இதயத்திலிருந்து வரும் இரத்தத்திலிருந்து, கார்பன்-டை- ஆக்சைடைப் பிரிக்கும் மற்றும் ஆக்சிஜன் நிரம்பிய இரத்தத்தைப் மீண்டும் இதயத்திற்கு அனுப்பும் வேலையை செய்கிறது.

நான் நலத்துடன் இருக்க, ஒரு நாளில் குறைந்தபட்ச நேரமாவது, எனக்கு உற்சாகப்படுத்தும் விதமாக, மூச்சிரைக்க ஓட சொல்லுங்கள் அல்லது இன்னபிற மூச்சுப் பயிற்சிகளை செய்ய சொல்லுங்கள். எனது பல அறைகள் “பூத் பங்களா” போல பூட்டிக் கிடக்கும் நிலையில் வைத்துக் கொள்ளாதீர்கள். நகர்ப்புறத்தில் இருக்கும் மாசடைந்த காற்றை சுவாசிப்பதையும், புகைப்பவர்கள் அருகில் போவதையும் தவிர்க்கச் செய்யுங்கள். அடுத்த ஜென்மத்தில்லாவது என்னை பராமரிக்கும், உற்சாகப்படுத்தும், நல்ல மனிதனை அடைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்…..